"உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.'
-திருவள்ளுவர்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல் அவற்றை மனஉறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒரு விதை ஆவான்.

சோழநாட்டில் காவிரித் தென் கரையிலுள்ள ஒரு கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் மனைவி, குழந்தைகளுடன் சராசரி வாழ்க்கை வாழ்ந்துவந்தார். ஒரு நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி வாரந்தோறும் சோமவார விரதமிருந்து சிவ வழிபாடு செய்துவந்தார். 

Advertisment

சத்தியமூர்த்தி வேலை செய்யும் இடத்தில் நிறுவன தலைவருக்கு வயது முதிர்வால் தளர்ச்சி ஏற்பட்டது. தன் பொறுப்பை தகுதியானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காக ஊழியர்களை அழைத்தார். ஆர்வமுடன் வந்திருந்தோரிடம் "நிறுவன நிர்வாகப் பொறுப்புக்கு ஒருவரை தேர்வுசெய்ய போட்டி ஒன்றை நடத்துகிறேன்; இதில் வெற்றிபெறுபவரே அடுத்த நிர்வாகியாக பொறுப்பு வகிப்பார்'' என்றார். 

அனைவரும் அவரைக் கவனித்து அமைதியாக நின்றனர். "என் கையில் சில விதைகள் இருக் கின்றன. ஆளுக்கு ஒன்றாகக் கொடுப்பேன். வீட்டில் தொட்டியில் நட்டு, உரம்போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து அடுத்த ஆண்டில் இதேநாளில் எடுத்து வரவேண்டும். யாருடைய செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ, அவரே இந்த பொறுப்புக்கு தகுதியானவராக முடிவு செய்வேன்'' என்றார் நிறுவனத் தலைவர்.

sami1

Advertisment

வியப்புடன் ஆளுக்கொரு விதை வாங்கிச் சென்றனர். நிறுவனத்தில் வேலை செய்யும் சத்தியமூர்த்திக்கும் ஒரு விதை கிடைத்தது. ஆர்வத்துடன் பெற்றுச் சென்றார். வீட்டில் அந்த விதையை நடுவதற்கு உதவிசெய்தார் அவரது மனைவி.

ஒரு வாரத்திற்குள் தொட்டியில் செடிவளர ஆரம்பித்து விட்டதாக பேசிக்கொண்டனர் ஊழியர்கள். சத்தியமூர்த்தி தொட்டியில் செடி முளைக்கவே இல்லை. ஒரு மாதம் கடந்தது. அதன்பின்னும் முளைக்கவில்லை. நாட்கள் உருண்டோடின. அப்போதும் தொட்டியில் செடியைக் காண முடியவில்லை. "விதையை வீணாக்கிவிட்டேனா' நடுக்கத்துடன் காத்திருந்தார் சத்தியமூர்த்தி. ஆனால் விதை ஊன்றி தொட்டியில் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவே இல்லை. தொட்டியில் ஊன்றிய விதை முளைக்க வில்லை என யாரிடமும் அவர் கூறவும் இல்லை. 

ஒரு ஆண்டிற்குப்பின்...தொட்டிகளை நிறுவனத்திற்கு எடுத்துவந்தனர் ஊழியர்கள். காலித் தொட்டியை எடுத்துப் போகமாட்டேன். எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று மனைவியிடம் மறுப்பு தெரிவித்தார் சத்தியமூர்த்தி.

"செடி வளராததற்கு வருந்தாதீர். அதற்கு நீங்கள் காரணமல்ல தொட்டியை இருப்பதுபோல் எடுத்துச் சென்று காட்டுங்கள்'' கணவரை சமாதானப்படுத்தினார் மனைவி.அதன்படி எடுத்துவந்தார் சத்தியமூர்த்தி. அனைத்து ஊழியர்களின் தொட்டிகளிலும் விதவிதமாக செடிகள் வளர்ந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கின. 

சத்தியமூர்த்தியை அனைவரும் ஏளனமாகப் பார்த்தபடி நின்றனர். ஒவ்வொன்றாக பார்வையிட்டார் நிறுவனத் தலைவர்.

"அருமை எல்லாரும் செம்மையாக வளர்த்து உள்ளீர்...'' என்று பாராட்டியபடி கடைசி வரிசையில் நின்றிருந்த சத்திய மூர்த்தியை அருகே அழைத்தார் தலைவர். பயந்தபடி சென்றவரிடம், "உங்கள் செடி எங்கே?...'' என்று கேட்டார். விவரத்தை எடுத்துரைத்தார் சத்தியமூர்த்தி. 

"இந்த கம்பெனி நிர்வாகத்தை ஏற்று நடத்த தகுதியானவர் நீங்கள் தான்...'' சத்தியமூர்த்தியை நட்புடன் அணைத்தபடி அறிவிப்பை வெளியிட்டார் தலைவர். அதிர்ச்சியில் உறைந்து குழம்பி நின்றனர் ஊழியர்கள்.

குழப்பத்தை போக்கும்விதமாக, "சென்ற ஆண்டு நான் உங்களிடம் தந்த விதைகள் அனைத்தும் வெந்நீரில் அவிக்கப்பட்டவை. முளைக்க வாய்ப்பே இல்லை. கொடுத்தது முளைக்காததால் எல்லாரும் வேறுவிதையை ஊன்றி வளர்த்து இருக்கிறீர். சத்தியமூர்த்தி மட்டுமே நேர்மையாக நடந்துள்ளார். 

அவரே நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர்...'' என்றார் தலைவர்.

அமைதியுடன் "உரைக்கும் சொல், பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் வெற்றிகள் தேடிவரும்' என எண்ணியபடியே புதிய பொறுப்பை ஏற்றார் சத்தியமூர்த்தி.

காட்டில் ஒரு சிங்கம் ஒரு ஆட்டை அழைத்து, "என் வாய் நாறுகிறதா' என்று பார்த்துச்சொல்'' என்று கேட்டது. ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு "ஆமாம் நாறுகிறது' என்று சொல்லிற்று. உடனே சிங்கம், "முட்டாளே! உனக்கு எவ்வளவு திமிர்'' என்று கூறி அதன்மீது பாய்ந்து கடித்துக் குதறியது. அடுத்து சிங்கம் ஓநாயை அழைத்து அதனுடைய கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு "கொஞ்சம்கூட நாறவில்லை'' என்றது. சிங்கம், "மூடனே, பொய்யா சொல்கிறாய்?'' என்று கூறி அடித்துக்கொன்றது. பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது. 

நரி சொன்னது. "நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.'' சிங்கம் நரியை விட்டுவிட்டது. நரி தனது புத்திசாலித்தனத்தால் தனக்கு ஆபத்து காலம் நெருங்கியிருப்பதை அறிந்து சாதுரியமாக நடந்துகொண்டமையால் பிழைத்துக்கொண்டது.

sami2

ஒரு சொல் கொல்லும்; ஒரு சொல் வெல்லும் என்று முன்னோர்கள் முன்கூட்டியே சொல்லியுள்ளனர். சத்தியமூர்த்தியைப்போல் உண்மையைப் பேசவேண்டிய இடத்தில் உண்மையைப் பேசி, நரியைப்போல் சாதுர்யமாகப் பேசவேண்டிய இடத்தில் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசினால் வாழ்வில் உயரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குவதோடு புத்தி சாதுர்யத்துடன் அனைத்து அம்சங்களையும் அளிக்கவல்லதொரு உன்னதமான திருத்தலம்தான் அவளிவநல்லூர் ஸ்ரீசாட்சிநாத சுவாமி திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீ சாட்சிநாத சுவாமி.

இறைவி: அருள்மிகு சௌந்தரநாயகி.

பாடியவர்: அப்பர், சுந்தரர், சம்பந்தர்.

புராணப் பெயர்: சாட்சிநாதபுரம், திருஅவளிவநல்லூர், பாதிரிவனம், புல்லாரண்யம்.

ஊர்: அவளிவநல்லூர்.

தலவிருட்சம்: பாதிரி மரம்.

தீர்த்தம்: சந்திரபுஷ்கரணி.

வட்டம்: வலங்கைமான் வட்டம்.

மாவட்டம்: திருவாரூர் மாவட்டம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற இவ்வாலயம் சுமார் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. மூவரால் பாடப்பெற்றதும், பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றானதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருஅவளிவநல்லூர் சிவாலயம்.

"நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகம் நிலைசெய்து
கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காழரவில் நின்று நடமாடும்
ஆறுடைய வார்சடையினான் உறைவது 
அவளிவநல்லூரே...''

- திருஞானசம்பந்தர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்று 274 சிவ ஸ்தலங்களில் இது 163-ஆவது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 100-ஆவது தலமாக போற்றப்படுகின்ற ஆலயம். காசிப முனிவர், திருமால், முருகன், சூரியன், அகத்தியர், கன்வமகரிஷி ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

தல வரலாறு

பண்டைய காலத்தில் பாதிரிவனம், புல்லாரண்யம் என்ற புராணப் பெயரோடு விளங்குகின்ற இவ்வூரிலே சிவனாரை அன்றி வேறு எதையுமே நினையாத ஓர் எளிய அடியாராக ஆதி சைவ அந்தணர் ஒருவர் இத்தலத்தில் இறைவனை பூசித்துவந்தார். அந்த சிவாச்சார்யாருக்கு சுசீலை, விசாலாட்சி என்ற இரு மகள்கள். மூத்தவளுக்கு திருமணப் பருவம் வந்தது. சோழநாட்டின் சிறப்பு மிகுந்த பழையாறை நகரில், சோழ மன்னரின் அவையில் புலவராக இருந்த காசியபரின் மகன் விஷ்ணு சர்மருக்கு மூத்த மகள் சுசீலையை மணம் செய்துவைத்தார் சிவனடியார். 

திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்து காசியாத்திரைக்குப் புறப்பட்ட விஷ்ணுசர்மர், சுசீலையை அவருடைய பிறந்தகத்தில் விட்டுச் சென்றார். வருடங்கள் கழிந்தன. 

sami3

திடுமென சுசீலையை பெரியம்மை நோய் தாக்கியதில், கண்கள் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்தாள். அத்துடன் அம்மைத் தழும்புகளால் அவளின் முகமும் பொலிவிழந்தது.

காசியாத்திரை மற்றும் பலதலங்கள் தரிசித்து முடிந்து திரும்பிய விஷ்ணுசர்மர் மனைவியை அழைத்துச்செல்ல மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கே சுசீலையின் கோலம் கண்டு அதிர்ச்சியுற்றார். "இது என் மனைவி சுசீலையே அல்ல!' என்று அலறிய அவரிடம், நடந்த விஷயங்களை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் நம்பவில்லை.

இடைப்பட்ட காலத்தில், அர்ச்சகரின் இளைய மகள் விசாலாட்சி பருவமடைந்து நன்கு வளர்ந்து அக்காவைப்போலவே அழகாக இருந்தாள். அவளைப் பார்த்த விஷ்ணுசர்மர் "இவள்தான் என் மனைவி சுசீலை!'' என்று சொல்லி, அவளையே அழைத்துச் செல்வேன் எனப் பிடிவாதம் பிடித்தார். நடந்ததையெல்லாம் பார்த்து மனம் பேதலித்த சிவனடியார் கோவிலுக்குச் சென்று இறைவனடியில் வீழ்ந்து கதறினார். 

"நினைவு தெரிந்த நாளிலிருந்து உன்னைத்தான் பூஜித்தேன். உனக்குத்தானே ஊழியம் செய்தேன்... அதற்குப் பலன் இதுதானா இறைவா? என் மகளுக்கு இந்தக் கதியா? இதைப் பார்ப்பதைவிட உன் கழல்களிலேயே நான் உயிரைவிட்டு விடுகிறேன்!'' என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுது தொழுதார்.

அப்போது சிவபெருமான் ஒரு முனிவர் உருவத்தில் தோன்றி "நாளை காலை அனைவரும் சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி வாருங்கள்' என்று சொல்லி மறைந்தார். மறுநாள் அனைவரும் கோவிலுக்கு எதிரே உள்ள சந்திர தீர்த்தம் எனும் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டனர். என்ன அதிசயம்... தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த சுசீலையின் முகம், பழைய அழகோடு பளிச்சிட கண் பார்வையும் திரும்பியிருந்தது. அப்போது அங்கே முனிவர் உருவில் தோன்றிய இறைவன். "அவளே இவள்!' என்று கூறியருளினார். 

"நீ மணமுடித்த அந்தப் பெண்தான் இவள்' என்று இறைவனே சாட்சி சொன்னதும் விஷ்ணுசர்மர் தன் தவறை உணர்ந்து வருந்தினார். தனது அழுகுரலைக் கேட்டு ஓடிவந்து, மகளின் வாழ்வை மீட்டுத் தந்த பரமனின் பெருங்கருணையை நினைத்து, சிவனடியார் கண்ணீர் வடிக்க ரிஷப வாகனத்தில் அம்மையப்பனாகக் காட்சிதந்து, அவரை இன்னும் பேருவகைக்கு உள்ளாக்கினார் சிவபெருமான்.

தன் பக்தனின் குறைதீர்க்க நேரே வந்து சாட்சி சொன்னபடியால், "சுவாமி சாட்சிநாதர்' என்ற பெயரால் வழங்கப்பட்டார். இந்த ஐதீகத்தை விளக்கும்விதமாக, ரிஷப வாகனத்தில் அம்மையும் அப்பனும் அருள்பாலிக்கும் திருமூர்த்திகள் மூலவர் சந்நிதியில் சிவலிங்க மூர்த்தத்தின் பின்புறம் காணப்படுவது வேறெங்கும் காண்பதற்கரிய சிறப்பு என்கிறார் ஆலய பிரதான அர்ச்சகரான உமாபதி சிவாச்சார்யார்.

மேலும், அவர் கூறுகையில் "இச்சம்பவம் நிகழ்ந்தது ஒரு தை அமாவாசை தினம் என்பதால் அன்றைய தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. "அவளே இவள்' என்று இறைவன் கூறியதால் அவள் இவள் நல்லூர் என்றாகி காலப்போக்கில் "அவளிவநல்லூர்' என்று தற்போது சொல்வழக்கில் உள்ளது.

சிறப்பம்சங்கள் 

ப் சுயம்புலிங்கமாக அருளும் இத்தல இறைவனின் திருநாமம் ஸ்ரீ சாட்சி நாதசுவாமி, இறைவியின் திருநாமம் அருள்மிகு சௌந்தர நாயகி, சௌந்தர வல்லி.ப் இவ்வூருக்கு பனைபழுத்த நல்லூர், சாட்சிநாத புரம், புல்லாரண்யம், பாதிரிவனம் என்ற சிறப்புப் பெயர்கள் இருந்தாலும் அவளிவநல்லூர் என்றே மக்கள் மனதில் பதிவாகிவிட்டது.

ப் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் இருவரும் வந்து வணங்கி பாடி சிறப்பித்த இத்தலத்தில் அனுதினமும் நான்குகால பூஜைகள் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் இயக்கத்தில் முறைப்படி நடந்துவருகிறது.

ப் வருடத்திற்கு ஒருநாள் தை அமாவாசை நாளில் காலையில் புனித நீராடல், பஞ்ச மூர்த்திகள் திருவுலா, தீர்த்தம் வழங்குதல் என கிராமமே விழாக்கோலத்துடன் விமரிசையாக நடக்கும். சுற்றுப் பகுதி கிராமமே சூழ்ந்திருக்கும் அந்நாளில் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மையப்பனை வழிபடுவார்கள் என்று கூறுகிறார் ஆலய செயல் அலுவலர் தினேஷ்.

ப் கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்கள் இத்தல தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாளை உளமார வணங்க அவர்கள் குணம்பெற்று நலமுடன் வாழ்வர் என்கிறார் மெய்க்காவலர் சாட்சிநாதன்.

ப் தோல் சம்பந்தப்பட்ட மற்றும் சரும நோய் உள்ளவர்கள் ஒரு பௌர்ணமியன்று சந்திர தீர்த்தத்தில், நீராடி சுவாமி அம்பாளுக்கு அபிஷேக அர்ச்சனை செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் பொலிவுடன் விளங்குவர் என்றும், சௌந்திரம் என்றால் அழகு என்று பொருள். அலங்கோலமாய் உள்ள தேகத்தை அழகுடன் விளங்கச் செய்வதால் அம்மன் சௌந்தர நாயகி என்று மிகுந்த நம்பிக்கையோடு கூறுகிறார் கோவில் பணியாளரும் ஆலய கணக்கருமான ஸ்ரீதேவி.

ப் காஷ்யபமுனிவர், அகஸ்தியர், கண்வ முனிவர், சூரியன் மற்றும் முருகன் ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்  ஹரித்துவாரமங்கலத்தில் சிவபெருமானின் பாதங்களுக்கு  அருகில் பூமியை பன்றி வடிவம் எடுத்து செருக்குடன் நிலத்தை தோன்றியதற்காக, விஷ்ணு இங்குதான் சிவபெருமானிடம் தன் பிழை தீர்க்கும்படி மன்னிப்புப் பெற பிரார்த்தனை செய்தார் என்று தலபுராணம் சொல்கிறது.

ப் சிவாலயத்துக்குரிய அனைத்து பூஜைகளும் முறைப்படி நடந்தாலும் குறிப்பாக தை அமாவாசை, சித்திரை மாத நாயன்மார்கள் பூஜை, கிரகப் பெயர்ச்சி காலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

ப் இத்தல இறைவனின் திருப்பெயர் தம்பரிசுடைய நாயனார் என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரி தென்கரையில் அமைந்திருப்பதுடன் ஒரேநாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோவிலை அர்த்தஜாம பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக்கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவையாகும். சைவ சமயக்குரவர் நால்வரில் திருஞானசம்பந்தர் தம் தலயாத்திரையின்போது ஐந்து கோவில்களையும் ஒரேநாளில் அவ்வாலயத்துரிய பூஜா காலங்களில் வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது.

இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்... 

1.  திருக்கருகாவூர் (முல்லை வனம்) விடியற் கால வழிபாட்டிற்குரியது. 

2. அவளிவநல்லூர் (பாதிரிவனம்) காலை வழிபாட்டிற்குரியது.

3. ஹரித்துவார மங்கலம் (வன்னிவனம்) உச்சிக்கால வழிபாட்டிற்குரியது.

4. ஆலங்குடி (பூளை வனம்) மாலை நேர வழிபாட்டிற்குரியது.

5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.

இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் ஒரேநாளில் மேற்சொன்ன ஐந்து கோவில்கள் அதாவது கும்பகோணத்தில் புறப்பட்டு ஐந்தையும் பார்த்து வருவதற்குரிய நேரம் அனுசரித்துச் சென்றால் மொத்தம் ஆறு மணிநேரத்தில் நன்றாகப் பார்த்துவிட்டு வரலாம்.

சிவனுக்குரிய சோமவாரம், மாதசிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களிலோ, ஜென்ம, நட்சத்திரநாளிலோ ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து அந்தநாளில் மேற்சொன்ன ஐந்து ஆலயத்தை வலம்வரலாம்.

ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் லக்னம் ஆன்மாவையும் சந்திரன் ராசி உடலையும் குறிக்கும். சந்திரன் ஒரு ராசியில் ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும். அதுவே உங்கள் பிறந்த நட்சத்திரம் ஆகும். இந்த உடலை இயக்கி அதன் கர்மவினைகளுக்கேற்ப உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர் இந்த ஜென்ம நட்சத்திரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஆலய வழிபாட்டிற்கு மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரம் குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரமன்று கோவிலுக்கு சென்று ஒன்று அல்லது ஐந்து அகல் விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைக்கமுடியும். அனைத்துவித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாளாக ஜென்ம நட்சத்திர தினம் கருதப்படுகிறது.

ஆரண்யம் என்றால் காடு, காசிக்கு நிகரானது என்று பொருள். காசிக்கு நிகரான ஐந்து தலங்கள் காவிரித் தென்கரையில் மைந்துள்ளன. 

அந்த பஞ்ச ஆரண்ய தலங்கள் ஐந்தில் 2-ஆவது ஸ்தலம்தான் காலை வழிபாட்டிற்குரிய அவளிவநல்லூர். எவர் ஒருவர் தொடர்ந்து ஜென்ம நட்சத்திர வழிபாடு செய்துவருகிறாரோ அவரை கண் திருஷ்டி நெருங்காது. கர்மவினைகள் தீரும். தடைப்படும் செயல்கள் யாவும் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். 

ஜென்ம நட்சத்திரத்தன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலன் பெறுவதோடு சாதாரண வாழ்க்கையை வெகு உயரத்திற்கு கொண்டு செல்லமுடியும் என்கிறார் ஆலய அர்ச்சகர். அந்நாளில் அவளிவநல்லூர் திருத்தலத்திற்கு வருகை தாருங்கள்.

பிரதோஷ வழிபாட்டினால் பிரகாச வாழ்வு பெற்றாரே அதைச் சொல்வதா... ஆண்டிற்கு ஆறு அபிஷேகம் காணும் நடராஜர் வழிபாட்டில் நலமடைய செய்தாரே அதைச் சொல்வதா?... நல்லது- கெட்டது கலந்ததுதான் வாழ்க்கைங்கறதை இடஞ்சுழி வலஞ்சுழி விநாயகர் வழிபாட்டில் வினைகளைக் களைந்தாரே அதைச் சொல்வதா?.... வம்பு வழக்குகளை சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தித்து சங்கடத்துடன் வாழ்வோரை தேய்பிறை அஷ்டமி பூஜையில் வெற்றியை சந்தித்தாரே அதைச் சொல்வதா? ஆடிவெள்ளி வழிபாட்டில் சௌபாக்கியவதியாக வாழ்வதற்கு அன்னை சௌந்தர நாயகி அருள்புரிகிறாரே அதை சொல்வதா? அலங்கோலமாய் பார்வையிழந்து தோற்றப் பொலிவிழந்த விஷ்ணுசர்மரின் மனைவியும், ஆதிசைவ அந்தணரின் மூத்த மகளான சுசீலைக்கு பார்வையையும், பேரழகையும் தந்ததோடு அவர்களுக்கு அருட்காட்சிதந்து ஆனந்தப்படுத்தினாரே அவளிவநல்லூர் சுயம்புமூர்த்தியாய் அருளும் ஈசன் அதைச் சொல் வதா? ஆகமொத்தத்தில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருள்வதோடு அதிஅற்புத வாழ்வைத் தந்தருள்வார் என்று பெருமிதத்துடன் ஆத்மார்த்தமாகக் கூறுகிறார்கள் ஆலய தலைமை அர்ச்சகர் உமாபதி சிவாச்சார்யார் மற்றும் அவர் தம் துணைவியார்.

மேலும் அவர் கூறுகையில் எனக்கு உயிர்பிச்சை தந்த அவளிவநல்லூர் சாட்சிநாத சுவாமிக்கு இந்த 84 வயதிலும் ஈசனுக்கு சேவை செய்ய வைத்துள்ளாரே நான் ஒருவனே சாட்சி என்கிறார். அவள்- இவள் சகோதரிகளுக்கு அற்புத வாழ்வு தந்த ஈசன் நம்வாழ்வையும் மலரச் செய்வார் என்று உறுதியாகச் சொல்கிறார். 

திருக்கோவில் அமைப்பு

சோழவள நாட்டில் காவிரித் தென்கரையில் நீர்வளம், நிலவளம் மிக்க அவளிவநல்லூர் என்ற சிற்றூரிலே வயல் வெளிகளுக்கு நடுவே நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் மூன்று பிராகாரங்களைக்கொண்டு, முகப்பு வாயிலின் முன்புறம் சந்திர புஷ்கரணி தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி நின்ற நிலையில் உள்ளது. வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சிதருகிறார். உள்ளே நுழைந்தால் நேரே கிழக்கு நோக்கி மூலவர் சுயம்பு லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் ஆட்கொண்டார். உய்யக்கொண்டார் துவாரபாலகர்களாக உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சி நாதராக சிவன்- பார்வதி காட்சி தருகின்றனர். 

உள் சுற்றில் இடஞ்சுழி, வலஞ்சுழி என இரு விநாயகர், நால்வர், கன்மமுனிவர், வீரபுத்திரர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள், க்ஷேத்திர விநாயகர், முருகன், மகாலட்சுமி திருமேனிகள் உள்ளன. உள் சுற்று பின்புறம் மகாலிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, தவசம்மாள் ஆகிய திருமேனி உள்ளன. உள்ளே நடராசர் சன்னிதி மற்றும் உற்சவ திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் ஈசான்யத்திக்கில் நவகிரக சன்னிதியும், அதனருகில் தலவரலாற்றுக்கு மிகவும் சம்பந்தப்பட்ட அவள்- இவள் சகோதரிகள் (சுசீலை- விசாலாட்சி) உள்ளனர். காலபைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், மகாவிஷ்ணு, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் தலவிருட்சம் பாதிரி மரம் மற்றும் நந்தவனம் உள்ளது.

நடைதிறப்பு:  காலை 7.00 மணிமுதல் 12.00 மணிவரை மற்றும் 4.30 மணிமுதல் 8.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும். 

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ சாட்சிநாத சுவாமி திருக்கோவில். அவளிவநல்லூர், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்- 612 802. செயல் அலுவலர் தினேஷ் செல்: 93611 80926. கோவில் பணியாளர் கணக்கர் ஸ்ரீதேவி செல்: 84892 34981. மெய்க்காவலர் சாட்சிநாதன் செல்: 96293 47031.

பூஜை விவரங்களுக்கு: உமாபதி சிவாச்சாரியார் செல்: 89408 82365.

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம், ஆவூர் சென்றால் அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது அவளிவநல்லூர். தஞ்சாவூர்- திருவாரூர் மார்க்கத்தில் அம்மாபேட்டையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. அவளிவநல்லூர் பேருந்து வசதி உள்ளது.

படங்கள்: போட்டோ கருணா